மானிடம் அறிவியலிலும் ஏனைய துறைகளிலும் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. ஒவ்வொரு சமூகத்திற்கும் பொருத்தமான அறிவுரைகள் அல்லாஹ்வின் வேத வெளிப்பாடான வஹீ மூலம் வழங்கப்பட்டு வந்தது. மேலும், ஒவ்வொரு தூதருடைய சமூகத்தினரும் எதிர்கொண்ட அனைத்துப் பிரச்சினைகளையும் அது தீர்த்து வைத்தது. இவ்வாறு மானிடத்துக்கான வழிகாட்டல்கள் பூரணத்துவமடைந்தன.
தனது இறுதித் தூதுத்துவத்தை உலகத்திற்குக் கொடுக்க நாடிய அல்லாஹ், நபி முஹம்மத் (ஸல்) அவர்களை அனுப்பி வைத்தான். இதனால், அதற்கு முன்னர் தோன்றிய நபிமார்கள் அனைவரதும் வருகையின் நோக்கமும் பூரணத்துவமடைந்தது. அவருக்கு அருளப்பட்ட மார்க்கம் அனைவருக்கும் பொதுவானதும் நிரந்தரமானதும் ஆகும். அவருக்கு இறக்கி வைக்கப்பட்ட வேதத்தின் பெயர் ‘அல்-குர்ஆன்” என்பதாகும்.
அல்-குர்ஆன் முழு மானிட சமூகத்துக்குமான அல்லாஹ்வின் தூதாகும். இதனை ஏராளமான அல்-குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் உறுதிப்படுத்துகின்றன. அல்லாஹ் கூறுகின்றான்.
تَبَارَكَ الَّذِي نَزَّلَ الْفُرْقَانَ عَلَى عَبْدِهِ لِيَكُونَ لِلْعَالَمِينَ نَذِيرًا
“உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்” [அல்-புர்கான்: 1].
மானுட வாழ்க்கையின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியே அல்-குர்ஆன் இறங்கியுள்ளது. இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்ட வேதங்களுக்கு அல்-குர்ஆன் அடிப்படையான உரைகல் போன்றதாகும். அல்லாஹ் கூறுகிறான்.
شَرَعَ لَكُم مِّنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ
“நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கிறான். ஆகவே, நபியே, நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும் மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்ன வென்றால் நீங்கள் அனைவரும் சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள்; நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள் என்பதே” [அஷ்-ஷூறா: 13].
அல்-குர்ஆனின் தூதானது மானிட சமூகத்துக்கு மாத்திரமன்றி, ஜின்களுக்குமுரிய இறைத் தூதாகும். அல்லாஹ் கூறுகிறான.
“மேலும் நபியே! நாம் உம்மிடம் இந்தக் குர்ஆனைச் செவியுறும் பொருட்டு ஜின்களில் சிலரைத் திருப்பியதும், அவர்கள் அங்கு வந்தபோது மௌனமாக இருங்கள் என்று மற்றவர்களுக்குச் சொன்னார்கள். ஓதுதல் முடிந்ததும் தம் இனத்தாரிடம் சென்று அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர். ஜின்கள் கூறினார்கள், எங்களுடைய சமூகத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம். அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கிறது. அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்துகிறது. அது உண்மையின் பக்கமும் நேரான மார்க்கத்தின் பக்கமும் வழிகாட்டுகின்றது. எங்கள் சமூகத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்குப் பதிலளித்து அவர் கூறுவதை ஏற்று அவர்மீது ஈமான் கொள்ளுங்கள்” [அல்-அஹ்காப்: 29-31].
இவ்வளவு தனித்துவங்கள் நிறைந்த அல்-குர்ஆனானாது, மனிதன் தனது வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அனைத்திலும் தலையிட்டு அவற்றைத் தீர்த்து வைக்கிறது. ஆன்மீகம், அறிவியல், சமூகம், பொருளாதாரம், அரசியல் போன்ற அனைத்துத் துறைகளிலும் தோன்றுகின்ற பிரச்சினைகளை அறிவு பூர்வமாகவே அணுகித் தீர்த்து வைக்கிறது.
ஏனெனில், இந்த அல்-குர்ஆன் புகழுக்குரிய, ஞானம் மிக்க அல்லாஹ்விடமிருந்து வந்ததாகும். இது பொதுவான அடிப்படைகளைப் பேணித் தீர்வுகளை வழங்குகிறது; அவை மனிதனுடைய வாழ்க்கையைத் திட்டமிட்டுக் கொடுக்கின்றன. எல்லாக் காலங்களுக்கும் பொருத்தமான அடிப்படைகளையும் அடையாளப்படுத்துகிறது. இதனால், ‘எல்லாக் காலங்களுக்கும் எல்லா இடங்களுக்கும் பொருத்தமானது’ என்ற தனித்துவத்தை இது அடைந்து கொண்டது. இதனாற்றான் இது நிலையான மார்க்கமாக இருக்கின்றது.